அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா ?

அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கடந்த 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நாரிமன், சஞ்சய் கிஷண் கவுல், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதற்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்து பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெற்று தலைமைச் செயலாளராக ஆகிவிடுகிறார் என்று வைத்துக் கொண்டால், அவரின் பேரப் பிள்ளைகளுக்கும் அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், அரசுப் பணி பதவி உயர்வில், காலங்காலமாக இடஒதுக்கீடு தொடர வேண்டுமா என மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version