வட்டிக்கு வட்டி ரத்து: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி ரத்து நடைமுறையை உடனே அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பாரபட்சமின்றி அனைவரையும் பாதித்தது. மாதத் தவணையை கட்ட முடியாமல் விழி பிதுங்கிய நிலையில், வங்கிக்கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்த ரிசர்வ் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதம் அவகாசம் வழங்கியது. வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்வது தொடர்பாக பதிலளிக்க மேலும் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்றம், வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், முடிவை அமல்படுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Exit mobile version