அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த துணை வழக்கை மாற்றத்தேவையில்லை என்பதும் நீதிபதிகளின் உத்தரவு.
1994ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், மசூதிக்கு சென்று தொழுகை செய்தல், இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா என பெரிய அளவில் விவாதிக்கப்பட வேண்டியதில்லை என்றனர்.
அனைத்து மதங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
மூன்று நீதிபதிகள் அமர்வில், நீதிபதி நசீரின் தீர்ப்பு மட்டும் சற்று மாறுபட்டு இருந்தது. ஆனால், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்ற தீர்ப்பு பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதான அயோத்தி வழக்கு அக்டோபர் 29-ந் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.