அமெரிக்கா பெண்ணை திருமணம் செய்துவிட்டு காஞ்சிபுரத்தில் அனாதையாகத் தவிக்க விட்டுச் சென்ற சென்னை இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பெண் காவலருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்மணியை மீட்டு, அவருக்கு புதிய துணியை வாங்கி அணிவித்தனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் கேலா மரீன் நெல்சன் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த விமல் என்பவர், அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு விமல் வேலை இழந்துள்ளார் என்றும், அவருடைய மனைவியான அமெரிக்கப் பெண்மணி கேலா மரீன் நெல்சன், போதைக்கு அடிமையானதும் தெரியவந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில், தன் மனைவி கேலா மரீன் நெல்சனை, விமல் இறக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள லிட்டில் ஆர்ட்ஸ் எனும் பெண்கள் காப்பகத்தில் அந்த அமெரிக்கப் பெண் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றி, ரோட்டில் அனாதையாக விட்டுச் சென்று தலைமறைவாகி உள்ள விமலை தேடி வருகின்றனர்.
அத்துடன், அமெரிக்க தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க தூதரகத்தினர், தமிழக காவல்துறையின் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு, சென்னை விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தனர். இதனால், தமிழக காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.