புதுச்சேரியில் அரசு விழாவில் குறைகளை சுட்டிக்காட்டி அதிமுக எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்தபோது,ஆளுநர் கிரண்பேடி மைக் இணைப்பை துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியை திறந்த வெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக அறிவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அன்பழகன், தமது தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டினார். அப்போது அங்கிருந்த அதிகாரியை அழைத்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, பேச்சை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினார்.
ஆனால் இந்த அத்துமீறலை கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கிரண் பேடி இருக்கையை விட்டு எழுந்து அன்பழகனின் மைக் இணைப்பை துண்டித்தார். இந்த செயல் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிரண்பேடி அத்துமீறி நடந்து கொண்டதால் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு வெளியேறிய அன்பழகன், துணைநிலை ஆளுநர் நடந்து கொண்ட விதம் ஒட்டு மொத்த எம்.எல்.ஏ க்களையும் அவமதிக்கும் செயல் என்றார். இது தொடர்பாக உரிமை மீறல் புகார் கொடுக்க உள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.