அதிமுக அரசு பொறுப்பேற்று இதுவரை 42 ஆயிரத்து 373 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 49 ஆயிரத்து 734 பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் விழாவில் பேசிய அவர், அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 23 ஆயிரத்து 269 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 42 ஆயிரத்து 136 பணிகள் துவக்கி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், தனது தலைமையின் கீழ் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு; 19 ஆயிரத்து 103 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 7 ஆயிரத்து 598 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆக மொத்தம் 42 ஆயிரத்து 373 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 49 ஆயிரத்து 734 பணிகள் நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 393 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார். அத்துடன், கீழ்கதிர்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமைக்க 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மழைநீர் கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த மாவட்டத்தில் 7 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல பிரிவு 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இதேபோல், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமையோடு நினைவு கூர்ந்தார்.