“அதிமுகவில் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக முடியும்” – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கு சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக முடியும் என்று கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நெல்லை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் திரண்டு வந்து தன்னை வரவேற்ற பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், இத்தகைய சிறப்பான வரவேற்பை ஒருபோதும் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக அவர் கூறினார். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும், அதிமுகவை அழிக்க வேண்டும் என்று தீயசக்திகள் செயல்படுவதாகவும் அவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா இருந்தபோது மக்களவை தேர்தலில் 37 இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அதேபோன்ற வெற்றியை இந்த முறையும் ஈட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்குத் தேவையான நிதி, திட்டங்களை கேட்டுப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

திமுகவில் வாரிசு அரசியல் நடப்பதாக விமர்சித்த முதலமைச்சர், அதிமுகவில் சாதாரண விவசாயியும் முதலமைச்சராக முடியும் என்று தெரிவித்தார்.

Exit mobile version