பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருப்பதை நினைவு கூர்ந்த முதலமைச்சர், காஞ்சிப்பட்டின் தனித்துவம் குறித்து விளக்கினார்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமை மீட்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்,மின் உற்பத்தி பகிர்மான கடனை அரசு ஏற்றது, நீர் நிலைகளை பராமரிக்க குடிமராமத்து திட்டம், வீடு வழங்கும் திட்டம் ஆகியவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்த அவர், 38 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்றார். ஆட்சியர் அலுவலகத்தில் 300 பேர் அமரும் வகையில் மக்கள் நல்லுறவு மையம், 20 கோடி மதிப்பில் தாய்சேய் நல மருத்துவமனை கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறையில் 2030 ஆண்டு எட்ட வேண்டிய இலக்கை 2018 ம் ஆண்டே தமிழகம் பெற்று விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
திமுக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதிகார போதையில் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம் என்று சூளுரைத்தார்.