அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரது திருவுருவச் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
தேசத்தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் அண்ணல் காந்தியடிகள் ஆங்கிலேயரின் அடிமைத் தளையில் இருந்து இந்தியாவை மீட்டவர். அகிம்சை வழியில் அவர் நடத்திய போராட்டங்கள் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தன.
அவரது 150வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
தமிழகத்திலும் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் திருவருவச் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.