மகாத்மா காந்தியின் நினைவுநாள் இன்று!

ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் நினைவுதினமானது அனுசரிக்கப்படுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் இந்திய விடுதலையின் முதன்மையானவர்களில் மிக முக்கியமானவர். வன்முறை மட்டுமே சுதந்திரத்திற்கு பாதை அல்ல என்று வன்முறையில் செல்லும் வழியைத் தவிர்த்து அஹிம்சையும் சத்தியாகிரகமும்தான் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கான சரியான வழி என்று தனது பாதையை நிர்ணயித்துக்கொண்டார். அமைதியும் அறப்போராட்டமும் விடுதலையை வாங்கித் தரும் என்று காந்தியின் பின்னால் பல தொண்டர்கள் நாடு முழுவதும் திரண்டனர்.

1920-21ல் அவர் நடத்திய ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. அந்த ஒத்துழையாமை இயக்கத்தைக்கூட 1922ல் நடைபெற்ற செளரிசெளரா வன்முறை சம்பவத்தினால் கைவிட்டார். பிறகு மிகவும் முக்கியமான போராட்டமாக காந்தியடிகளை உலக அளவில் காட்டியது உப்பு சத்தியாகிரக போராட்டமாகும். இதற்காக குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து நடைபயணமாக தண்டி சென்று உப்பு காய்ச்சி கைதானார். பிறகு வந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்றவை காந்தியின் அறப்போராட்டங்களில் குறிப்பிடத் தகுந்தது ஆகும்.

நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களை அற வழியில் விரட்ட எண்ணிய காந்தியடிகளின் இறப்பு மிகவும் கொடுமையானது. வாழுந்தோறும் வன்முறை வேண்டாம் என்று இருந்தவர் அந்த வன்முறையினாலே இறந்தார். கிட்டத்தட்ட ஒரு புள்ளிவிவரம் சொல்வது என்னெவென்றால் காந்தியடிகளை 1934லிருந்தே கொல்வதற்கு பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன என்று சொல்லப்படுகிறது. ஐந்துமுறை சாவின் கூர்முனையிலிருந்து தப்பித்து ஆறாவது முறையாக கோட்சே எனும் நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1948 ஜனவரி 30ஆம் தேதி இந்தக் கொடூர சம்பவம் நடந்தேறியது. நாடே கண்ணீர் விட்டது. இந்த நாளையொட்டி வருடந்தோறும் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும். இந்தநாளில் நாமும் நம் தேசத்தந்தையை நினைவில் நிறுத்தி அஞ்சலி செலுத்துவோம்.

Exit mobile version