2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 50 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதில், தனது முதல் பிரசாரத்தை உத்தரபிரதேசத்தில் இன்று அவர் தொடங்குகிறார்.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில, மக்களிடம் ஆதரவு திரட்ட பிரதமர் மோடி தீவிர சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தில் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
வாரணாசி, அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அசம்கர் செல்லும் மோடி, அங்கு புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து, வாரணாசி திரும்பும் மோடி அங்கிருந்து கச்னார் கிராமத்தில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மிர்சாபூரில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.