தமிழகத்தில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது குறைந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்று பின்னர் புயல் சின்னமாக உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்திலும் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும், 7-ம் தேதி அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம், 7-ம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் உத்தரவிட்டுள்ளார்.
அதீத கனமழை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார். பேரிடர் பயிற்சி முடித்த 60 முதல் 80 பேர் கடலோர மாவட்டங்களிலும், 50 பேர் மற்ற மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள 15 அணைகள் கிட்டத்தட்ட நிரம்பும் தருவாயில் இருப்பதால், 15 லட்சம் மணல் மூட்டைகள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.