அங்கன்வாடி பள்ளிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜியாக மாற்ற வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி பள்ளிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜியாக மாற்றி குழந்தைகளுக்கு ஆங்கிலமும், தமிழும் கற்றுக் கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் உள்ள பதின்ம பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா விருதுநகரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளை எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜியாக மாற்றி குழந்தைகளுக்கு சிறந்த ஆங்கிலமும் தமிழும் கற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையில் யூடியூப் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதிமுக அரசுக்கும் அரசு பள்ளிகளுக்கும் எப்போதும் குரு உச்சம் தான், இதனால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

Exit mobile version