Yu tu brute? என்று தன் நண்பன் ப்ரூட்டஸைப் பார்த்து வீழ்ந்தபடியே நம்பிக்கைத் துரோகத்தை தாங்கிகொள்ளாமல் உயிரை விடும் ஜூலியஸ் சீசரை நம்மில் பலருக்கு நினைவு இருக்கும். ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது நாடகமான ஜூலியஸ் சீசரில் இந்த காட்சியை அபரிமிதமாக தத்ரூபமாக படைத்திருப்பார். அதனாலேயே இதனை நம்மில் பலர் வெறும் புனையப்பட்ட நாடகம் என்றுதான் நம்பி இருப்போம். இப்போது வரை சிலர் நம்பிக்கொண்டும் இருக்கின்றோம். ஆனால் உண்மையில் ஜூலியஸ் சீசர் என்பது ஒரு வாழ்ந்த மனிதர் தான். அவரின் கதையைத் தான் ஷேக்ஸ்பியர் புனைந்து கவித்துவ வடிவில் நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார். இதனால் இருவரின் புகழும் பார் போற்றும்படி வளர்ந்தது.
இன்றைக்குதான் ஜூலியஸ் சீசர் ப்ரூட்டஸால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட தினம். கிமு 44 ல் மார்ச் 15 ஆம் தேதி பெரும்சதியால் வீழ்த்தப்பட்டார் ஜூலியஸ் சீசர். மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலையின் கீழ் இரத்த வெள்ளத்தில் மிதந்தார் சீசர். அவரது உடலில் முப்பத்தைந்து கத்திக்குத்துகள் குத்தப்பட்டிருந்தன. இதற்கான காரணமாக ஜூலியஸ் சீசரின் சர்வாதிகாரத் தன்மை யாருக்கும் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னொருபுறம் ஆட்சிப்பீடத்தில் அமரும் ஆர்வம் பலரின் கண்ணை மறைத்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதைவிட மற்றொரு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. அன்றைய காலத்தில் உலகின் அழகியாக திகழ்ந்த கிளியோபட்ராவை மனைவியாக ஆக்கிக்கொண்டவர் சீசர். அதனால் அவரைக் கொன்று கிளியோபட்ராவை அடைவதற்காகவும் இக்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
2003இல் மனநல மருத்துவர் ஆர்பர் எஃப். ஓடர் சீசரின் வலிப்பு நோய் காரணமாக ஏற்பட்ட மனநோயை “சீசர் காம்ப்ளெக்ஸ்” என்று பெயரிட்டுள்ளார்; வலிப்புநோயால் தான் வருத்தமுறுவதை மற்றவர் அறியக்கூடாதென்பதற்காகவே தனது மெய்க்காப்பாளர்களை விலக்கிக் கொண்டதும் அதுவே சீசரது கொலைக்குக் காரணமானதும் இந்த மனநோயாலேயாகும்.
ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் குத்தப்பட்டு வீழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது