சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே 35 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி, நள்ளிரவு தூக்க கலக்கத்தில் வெளியே வந்த போது, வீட்டிலுள்ள கிணற்றின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத 35 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். நெடுநேரம் ஆகியும் பாலாஜி திரும்பாததால் அவரை மற்றவர்கள் தேடியுள்ளனர்.
அப்போது கிணற்றில் வெளிச்சம் அடித்து பார்த்தபோது பாலாஜி ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கயிறு மூலம் நாற்காலியை கட்டி அதில் அமர வைத்து பாலாஜியை மீட்டனர்.
பின்னர் அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கிணற்றில் விழுந்த பாலாஜியை மீட்ட தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.