11ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்..
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 16 வயதே ஆன இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் என்ற இளைஞர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியின் தந்தை, பழவந்தாங்கலில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்திருந்த தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பழவந்தாங்கல் காவல்துறையினர், காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்நிலையில், காணாமல் போன மாணவியே வழக்கறிஞர் மூலமாக கடந்த 18ம் தேதி காவல் நிலையத்திற்கு வந்து, தான் ஷாம் சுந்தர் என்பவரை காதலிப்பதாகவும், அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் செல்ல விருப்பமில்லை என்று கூறியதால் காவல்துறையினர் அவரை கெல்லீஸ் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அந்த மாணவிக்கு 16 வயது மட்டுமே ஆகி இருப்பதால், அவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஷாம் சுந்தர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டது. இதனையடுத்து ஷாம் சுந்தரைக் கைது செய்த பழவந்தாங்கல் காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 16 வயதே ஆனே, 11-ம் வகுப்பு பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post