தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் போன்றவற்றில் தனது பெயர் வர வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்தி சாகசம் செய்பவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு இளைஞரோ தனது பெயர் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக ஒரு 6 வயது சிறுவனைக் கொலை செய்ய முயன்றிருக்கிறார்..
கடந்த ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ‘டேட் மாடர்ன்’ அருங்காட்சியகத்திற்கு வந்த ஒரு இளைஞர், அங்குச் சுற்றிப் பார்க்கத் தனது தாயுடன் வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவனைத் திடீரெனத் தூக்கிக் கொண்டு அருங்காட்சியகத்தின் மாடிக்கு ஓடினார்.
அருங்காட்சியகத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞனைப் பிடிக்க முயற்சித்தபோதும், அவர்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு 10ஆவது மாடிக்குச் சென்ற அந்த இளைஞர், அங்கிருந்து 6 வயது சிறுவனைத் தூக்கி எறிந்தார். 5ஆவது மாடியின் கூரையில் அந்தச் சிறுவன் விழுந்தான். இதனால் பலத்த காயம் அடைந்த சிறுவன், பின்னர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.
சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய இளைஞனின் புகைப்படத்தை நீதிமன்ற அனுமதி பெற்று, சமீபத்தில்தான் இங்கிலாந்து போலீசார் வெளியிட்டனர். ஜான்டி பிரேவரி எனப் பெயர் கொண்ட அந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட போதும், நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட போதும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். நீதிமன்றத்தில் தான் கொலை முயற்சி மேற்கொண்டதை ஒப்புக் கொண்ட அவர், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வர வேண்டும் என்பதற்காகவே சிறுவனை மாடியில் இருந்து வீசி உள்ளதாகக் கூறி உள்ளார்.
குற்றவாளியின் இந்த வாக்குமூலம் ஐரோப்பிய மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஜான்டி பிரேவரிக்குக் கட்டாயம் சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும், அவரை மனநலச் சிகிச்சைக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் இங்கிலாந்து நாட்டின் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.