மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு அனுமதி பெறவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய தண்டனை காலத்திற்கு முன்பே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சஞ்சய் தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் ராஜுவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தரப்பினர் பெற்றுள்ளனர். அதில் நன்னடத்தை காரணமாக சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தின்கீழ் தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை, மத்திய அரசின் அனுமதியின்றி மகாராஷ்டிர அரசு விடுவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் நன்னடத்தை அடிப்படையில் எந்தவித வழக்கிலும் ஒருவரை மாநில அரசு விடுவிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன் படி மாநில அரசே பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.
ராஜுவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.