ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை பதவியேற்கிறார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உடன் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோரினார். இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்கிறார். புதிய அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என்பதால், கடந்த 14 நாட்களாக கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரில் 3 பேரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். பெங்களூவில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ்குமார் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
Discussion about this post