சென்னை யானைக்கவுனியில் மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. விடியா அரசின் ஆமை வேக செயல்பாடு குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
சென்னை யானைக்கவுனி மேம்பாலம் கடந்த 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த மேம்பாலம் பழுதடைந்து காணப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 53 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு, இந்த மேம்பாலப் பணிகளை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இரு பகுதிகளையும் இணைக்கும் பாலம் என்பதால் யானைக்கவுனி மேம்பாலம் முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக புளியந்தோப்பு, புரசைவாக்கம், பெரியமேடு, சென்ட்ரல் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக இருந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த மேம்பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் விடியா ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழில் முனைய மேம்பாலமான யானைக்கவுனி மேம்பாலம், சென்னை மாநகராட்சியின் ஆமை வேக பணிகளால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சட்டப்பேரவையில் வாய் திறக்காத விடியா அரசு, அந்த பணிகளை முடிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தொழில் நிறுவனங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் யானைக்கவுனி மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post