எழுத்தாளர் பிரபஞ்சன் 1945 ஏப்ரல் 27 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தவர். புதுச்சேரிக்காரரை எழுத்து எனும் உந்துசக்தி புது உலகைப் படைக்க வைத்தது. 1961ல் இவரது என்ன உலகமடா என்கிற முதல் சிறுகதை பரணி என்கிற இதழில் வெளியானது. 1995 ஆம் ஆண்டு வாக்கில் வானம் வசப்படும் என்கிற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றார். இவர் எழுதிய மற்ற சில புதினங்கள் மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, சுகபோகத்தீவுகள், காகித மனிதர்கள், காதலெனும் ஏணியிலே, கண்ணீரால் காப்போம், பூக்கள் நாளையும் மலரும், பெண்மை வெல்க, பதவி போன்றவை ஆகும்.
எழுத்தாளர்கள் என்பவர்கள் தனிமை விரும்பிகள் என்கிற கற்பிதம் பொதுஜனங்கள் மத்தியில் விரவி உள்ளது. அது முழுக்க சரியான கற்பிதம்தான் என்று சொல்வதற்கு இடமில்லை என்றாலும், அதில் சில சதவீத உண்மையும் உள்ளது. குறிப்பாக பிரபஞ்சன் தன்னை ஒரு தனிமை விரும்பியாகவே வெளிப்படுத்தினார். இப்படி சொல்வதைவிட தனிமையில்தான் அவர் தன்னை உணர்ந்தார். பிரபஞ்சனை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம், அவர் மனது வைத்தால் மட்டும். சில வேளைகளில் வீட்டிற்கு வரசொல்லிவிட்டு ஆள் காணாமல் போய்விடுவார். அதற்கு காரணம் வந்தவர்களை அவரால் முறையாக உபசரிக்க முடியாமல் போய்விடும் என்கிற தாழ்வுமனப்பாண்மையும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. ஏழ்மையில்தான் இருந்தார், ஆனால் எழுத்துதான் அவரை இயங்கவைத்தது. மேலும் நண்பர்கள் உதவித் தொகையாகத் தரும் பணத்தைக்கூட எப்படி செலவு செய்ய என்று முழிக்கும் அளவிற்கு அவருக்கு பணத்தேவைப் பற்றின கவலையோ எதுவுமோ இல்லை. பயணங்களுக்கு மட்டுமே அவர் செலவழித்தார்.
அவரது முக்கிய கருத்தாக்கமான “எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்கிற சொல்லாடல் அவருக்கே பொருந்திப் போகும். அப்படித்தான் வாழ்வை அமைத்துக்கொண்டார். அவர் மீதான கற்பிதங்களை வளர்த்துக்கொண்டு தேடி வரும் வாசகர்கள் பற்றி சில நகைச்சுவைகளையும் மேடையில் பகிர்ந்துகொண்டிருப்பார். குறிப்பாக எழுத்தாளர்கள் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு எழுதுவார்கள் என்று யாரோ சொல்லிக் கேட்டு வந்த வாசகர் இரவு இரண்டாம் கட்ட சினிமாவை முடித்துக்கொண்டு பிரபஞ்சனின் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளார். தூக்கக் கலகத்தில் கதவைத் திறந்துள்ளார் பிரபஞ்சன். என்ன சார், தூக்கிட்டு இருக்கீங்க, எழுதிக்கிட்டு இருப்பீங்கனு நினைச்சேன் என்று சொல்லியுள்ளார் வாசகர். அதற்கு பிரபஞ்சன், நீங்க அடுத்த முறை வரும்போது நிச்சயம் முழிச்சிருக்கேன் தம்பி என்று சொல்லியுள்ளார். இப்படி நகைச்சுவையாகவும், சமூக நலன் மீது அக்கறைகொண்டும், மனிதம் பேசியும் தவ வாழ்வு வாழ்ந்த பிரபஞ்சன் டிசம்பர் 21, 2018ல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
Discussion about this post