நேற்றைய மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பெங்களூருவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் வெளியேறினார்.இந்தத் தொடரில் மந்தனா மிகவும் மோசமான பார்மில் ஆடி வருகிறார். சோபி டெவின் 21 ரன்கள் வெளியேற இறுதி வரை களத்தில் நின்றார் எல்லீஸ் பெர்ரி. அவர் 5 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளையும் சிதறடித்து 67 ரன்கள் சேர்த்து இறுதிவரை தனது விக்கெட்டை இழக்காமல் களத்தில் நின்றார். அவருக்கு உறுதுணையாக ரிச்சா கோசும் 37 ரன்கள் அடித்து 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் அடிக்க காரணமாயிருந்தார். டெல்லி சார்பாக ஷிக்கா பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பிறகு 151 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியானது இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில் இலக்கை எளிதில் விரட்டிப் பிடித்தது. கேப்டன் மேக் லென்னிங்க் 15, ஷவாலி வர்மா 0 ரன்களுக்கு வெளியேறினாலும், ஆலிஸ் கேப்சி 38, ஜெமிமா ரொட்ரிகஸ் 32 எடுத்தனர். ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மேரிசன் கப் மற்றும் ஜெஸ் ஜோன்சன் முறையே 32, 29 ரன்கள் எடுத்து இலக்கை எட்டினர். பெங்களூர் அணி சார்பாக சோபனா ஆஷா 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும், பெங்களூர் அணி கடைசி இடத்திற்கும் சென்றது. இந்தத் தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெங்களூர் அணி பெறவில்லை எனபது குறிப்பிடதக்கது. ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வி. ப்ளேயர் ஆஃப் த மேட்சினை ஜெஸ் ஜோன்சன் பெற்றார்.