மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக்கானது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிதான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற விதி இந்த லீக் ஆட்டங்களில் பிரதானமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  அதிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெறும். அதன்படி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும் உபி வாரியர்சும் மோத உள்ளன. அதில் எந்த அணி வெல்கிறதோ அதுவே இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும்.

பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பானது மும்பை அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்பதாகும். புள்ளிப்பட்டியலிலும் கூட முதலில் விரைவாக முன்னேறியது. பிறகு தொடர்ந்து பின்னடைவை சந்தித்தது. நேற்றைய ஆட்டத்தில் ஆர்.சி.பி அணியுடன் வெற்றி பெற்று மீண்டும் பழைய பார்மிற்கு மும்பை அணி திரும்பியுள்ளது. அதே போல நெற்றைய மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி குஜராத் அணியை வீழ்த்தியது. லீக்கில் மொத்தமாக 22 போட்டிகள் நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்தது.

டெல்லி அணியைப் பற்றி நாம் இறுதிப்போட்டிக்கு முதல் நாள் தெளிவாக பார்க்கலாம். தற்போது மும்பை மற்றும் உபி பற்றி சுருக்கமாக பார்க்கலாம். மும்பை தான் விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளில் உள்ளது. மேலும் அணியின் நெட் ரன் ரேட் +1.7 ல் உள்ளது. ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பட்டியா, ஹர்மன்ப்ரீட் கவுர், அமீலா கர் போன்றவர்கள் நல்ல பார்மில் உள்ளனர். இருந்தாலும் சிலப் போட்டிகளில் இவர்கள் ரன் அடிக்கத் தவறிவிட்டனர். ஆனால் பந்துவீச்சினைப் பொறுத்தவரையில் மும்பை அணி ஒரு வலிமையான அணி என்று தொடர்ந்து நிரூபிக்கிறது. அமிலா கர், இஸ்ஸி வாங், நாட் ஸ்கீவர் ப்ரண்ட் ஆகியோர்களின் பவுலிங்க் நல்ல நிலையில் இருக்கிறது. முக்கியமாக ஆல்ரவுண்டர்கள் மும்பை அணியில் திறம்பட இயங்குகிறார்கள்.

உபி அணியினைப் பொறுத்தவரை ஆடிய 8 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.  மேலும் அவர்களது ரன் ரேட் -0.2 என்ற விகிதத்தில் உள்ளது. அலீசா ஹீலி, டகிலா மெக்ராத், க்ரேஸ் ஹாரிஸ் போன்றவர்கள் தற்போது நல்ல பார்மில் உள்ளார்கள். அவர்களது பேட்டிங் மிகவும் இன்றியமையாதது ஆகும். சோபி எக்லஸ்டோன் பந்துவீச்சு அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.  இந்த இரண்டு அணிகளும் லீக் போட்டிகளில் இரண்டு முறை சந்தித்துக் கொண்டன. அதில் ஆளுக்கு ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். வரும் வெள்ளி இந்த இரு அணியும் மோதிக்கொள்ளும் எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கிறது. யார் டெல்லி அணியுடன் பைனலில் மோதப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

Exit mobile version