மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது. இறுதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. முன்னாத நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணி உபி வாரியர்ஸ் அணியை வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு நடைபோட்டது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் என்ற பெயருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதற்கு ஆடவர் அணியின் ஐபிஎல் ஆட்டங்களும் ஒரு காரணம். தற்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீறு நடை போடுகிறது. யாஷிக பாட்டியா, ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கீவர் ப்ருன்ட் ஆகியோரி முதன்மை ஆட்டக்காரர்களாக திறமையாக செயல்படுகிறார்கள்.
அதேபோல பந்து வீச்சினை எடுத்துக்கொண்டால் இஸ்ஸி வாங், சைக்க இஷக் திறமையாக செயல்படுகிறார்கள். மேலும் முதன்மை ஆட்டக்காரர்களே ஆல்ரவுண்டர்களாக செயல்படுகிறார்கள். லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகள் சறுக்கினாலும் தன்னுடைய இடத்தினை மும்பை அணி சரிசெய்து கொண்டு தற்போது இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை கேப்டன் மெக் லென்னிங் அதிரடியான பார்மில் உள்ளார். அவர் தான் தற்போதைக்கு இந்த லீக்கின் முன்னணி ரன் ஸ்கோரர். அதற்கு கொடுக்கப்படும் ஆரஞ்சு தொப்பியை அவர் வசமே உள்ளது. ஒபனிங் வீராங்கனை அதிரடியாக ஆடும் ஷவாலி வர்மாவும் டெல்லி அணிக்கு கூடுதல் சிறப்பு. அதேபோல ஆல்ரவுண்டர் அலீசா கேப்சி, பந்து வீச்சாளர் மேரிசன் கெப் போன்றவர்கள் டெல்லி அணிக்கு கூடுதல் பொறுப்பானவர்கள். டெல்லி அணி லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் ரன்ரேட் விகிதத்தினை நல்லமுறையில் வைத்திருந்தது. அதன் விளைவாக லீக் முடிவின் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இரண்டு வலுவான அணிகளுக்கு இடையில் எந்த அணி வெற்றி பெறும் என்று சுவாரஸ்யமாக உள்ளதால் இரசிகர்கள் இந்தப் போட்டியினைக் காண துடிப்புடன் காத்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. டெல்லியா? மும்பையா? நாளைத் தெரிய வரும்…!