இந்தியாவில் பெண்கள் ப்ரீமியர் லீக் தொடங்கி நடைபெற்ற வண்ணம் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், உத்திரப் பிரதேச வாரியர்ஸ் அணியும் களத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் இறங்கிய மேக் லேனிங் 42 பந்துகளுக்கு 70 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பத்து பவுண்டரிகளையும் மூன்று சிக்சர்களையும் அடித்திருந்தார். ஷபாலி வர்மா 17, மரிசன்னி கப் 16, ஆலிஸ் கேப்சி 21 ஆகியோர் சொற்ப ரன்கள் அடிக்க, ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரொடிக்ரூஸ் மற்றும் ஜெஸ் ஜோனாசன் இருவரும் சேர்ந்து அதிரடி காட்டினர். அவர்கள் முறையே 34, 42 ரன்கள் அடித்து அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரைப் பதிவு செய்திருந்தனர் டெல்லி.
212 என்கிற கடின இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணியில் ஓபனிங் ஆட்டக்காரர் ஸ்வேதா ஷெராவத் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் அலிசா ஹெலீ 24, கிரன் நவ்க்ரே 2, தீப்தி ஷர்மா 12, தேவிகா வைடா 23 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் களத்தில் இறுதிவரை நின்று தனது விக்கெட்டை இழக்காமல் தகிலா மெக்ராத் 90 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் பறக்கவிட்டார். இருந்தாலும் உபி அணியால் 169 ரன்கள் மட்டுமே ஆட்டமுடிவில் சேர்க்க முடிந்தது. ஜெஸ் ஜோனாசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். மேலும் பேட்டிங்கிலும் 20 பந்துகளில் 42 ரன்கள் பறக்கவிட்டதால் ப்ளேயர் ஆஃப் த மேட்ச் ஜெஸ் ஜோனாசனிற்கே வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.