மகளிர் ப்ரீமியர் லீக்கில் வெற்றி வாகை சூடிய பல்தான்ஸ்…!

மகளிர் ப்ரீமியர் லீக்கானது நேற்று இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் எதிர்கொண்டன. டாஸ் வென்ற டெல்லி அணியாது முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. கேப்டன் மேக் லென்னிங்கும் சவாலி வர்மாவும் ஆட்டத்தினைத் தொடங்கி வைத்தனர். சவாலி வர்மா 11 ரன்னுக்கு வெளியேற, மிகவும் எதிர்பார்த்த அலிசா  கேப்சி 0 ரன்களுக்கு நடையைக் கட்டினார். ஜெமியா ரொட்ரிகஸ் 9, மேரிசன் கெப் 18 ரன்கள் என அனைத்து முக்கிய பேட்டர்களும் சரியாக ரன் எடுக்க தவறினர். மேக் லென்னிங் மட்டுமே அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்திருந்தார். ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டினை விடாமல் ஆளுக்கு தலா 27 ரன்கள் எடுத்தனர். இருபது ஓவர்கள் முடிவில் டெல்லி அணியானது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ், இஸ்ஸி வாங் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். 

பிறகு 132 என்கிற எளிய இலக்கினை நோக்கி முன்னேறியது மும்பை அணி. அவர்களுக்கும் தொடக்கமே சற்று தடுமாற்றமாகவே இருந்தது. ஹேலி மேத்யூச் 13, யாஷிகா பாட்டியா 4 என்று வெளியேற, மூன்றாவது விக்கெட்டிற்கு நாட் ஸ்கீவர் ப்ருண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்களி வெளியேற, ஸ்கீவர் 60 ரன்கள் அடித்து விக்கெட்டினை விடாமல் இறுதி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் ப்ளேயர் ஆப் த மேட்ச் விருதும் அவருக்கே கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் கோப்பையை வென்ற முதல் அணி என்கிற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது. இந்தப் போட்டியை இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆடவர் மும்பை இந்தியன்ஸ் அணியினரும் கண்டுகளித்து உற்சாகமூட்டினார்கள். மேலும் ப்ளேயர் ஆப் த டோர்னமண்ட் விருதினை ஹேலி மேத்யூஸ் பெற்றுச் சென்றார்.

தொடரில் அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை டெல்லி அணியின் கேப்டன் மேக் லென்னிங் பெற்றார். அவர் மொத்தமாக 9 போட்டிகளில் 345 ரன்கள் எடுத்திருந்தார். அதிக விக்கெட் வீழ்த்தியருக்கான ஊதா நிறத் தொப்பியை மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் பெற்றார். அவர் 10 போட்டிகள் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தொடரின் தனிநபர் அதிகபட்ச ரன்னாக ஆர்சிபி அணியின் சோபி டிவைன் 99 ரன்கள் எடுத்ததே சாதனையாக கருதப்படுகிறது. அதே போல டெல்லி கேப்பிடஸின் மேரிசன் கெப் 5/15 என்று  விக்கெட் எடுத்துள்ளதே தனிநபர் விக்கெட் சாதனையாக உள்ளது. மேலும் இந்த மார்ச் 31 லிருந்து ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகளும் தொடங்க உள்ளன.

Exit mobile version