இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது லண்டன் மாநகரின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆட்டத்தின் முதல் நாள் இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு டாஸ் போட்டு ஆரம்பிக்கப்பட்டது. டாஸில் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். முக்கியமாக இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாதது ரசிகர்கள் இடையே பெருத்த கவலையை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றால் போலத்தான் இந்தியாவின் பந்துவீச்சு நேற்று இருந்தது என்றும் கூறலாம்.
சிராஜ், ஷமி, ஷர்துல் போன்றவர்கள் சிறந்த விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர்களாக இருந்தாலும் அவர்களால் ரன்களை கட்டுப்படுத்த இயலவில்லை எனபதுதான் நிதர்சனம். உஸ்மான் கவஜா-வை 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் சிராஜ். லபுசேஞ்சினை 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் ஷமி. அதிரடி வீரர் டேவிட் வார்னரை 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் ஷர்துல். அதற்கு பிறகுதான் நடந்தது களபேரங்கள். டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரின் ஜோடியும் இந்திய பந்துவீச்சினை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டது. இந்த இடத்தில்தான் அஸ்வின் தேவை என்கிற வாதம் ரசிகர்களிடையே வலுத்தது. அஸ்வின் இடது கை மட்டையாளர்களை எளிதாக கையாளக்கூடியவர். டிராவிஸ் ஹெட் இடது கை மட்டையாளர் என்பதால், அவரை திணறடித்திருக்கக்கூடிய வாய்ப்பு அஸ்வினிடம் இருந்திருக்கும்.
இந்த இரண்டு இரு ஜாம்பவான் ஜோடிகளும் சேர்ந்து தற்போது வரை 251 ரன்கள் குவித்துள்ளனர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மூன்று விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் ஆகும். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 22 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 156 பந்துகளுக்கு 146 ரன்கள் குவித்து, இன்னும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரைத் தொடர்ந்து சதம் அடிக்கும் ரேசில் ஸ்டீவன் ஸ்மித் உள்ளார். 14 பவுண்டரிகளுடன் 227 பந்துகளில் 95 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதம் அடிக்க வாய்ப்புகள் அதிகம். சதம் அடிக்கும்பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.