இன்று மார்ச் 21 ஆம் தேதி உலக கவிதைகள் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தினை ஐநாவின் யுனஸ்கோ அமைப்பானது 1999 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. கவிதைகள் வாசிக்கப்படவும், எழுதப்படவும் வேண்டும் என்று ஊக்குவிக்கும் பொருட்டு இத்தினத்தினை ஐநா அங்கீகரித்தது. உலக அளவிலும் இந்திய அளவிலும் கவிஞர்கள் அதிக அளவில் உள்ளார்கள். தமிழ் கவிதை மரபு என்பது காலத்தால் மெச்சப்படக்கூடிய ஒன்று. சங்ககாலப் பாடல்களிலிருந்து தற்கால நவீனக் கவிதைகள் வரை அதற்கென்று ஒரு வரலாறு உண்டு. தமிழ் இலக்கியத்தில் முதலில் உருவானதே கவிதை வடிவம் தான்.
செய்யுள். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல கட்டங்களில் மொழியைக் கையாளக்கூடிய வகையில் கவிதையை பயன்படுத்தலாம். உரைநடை வகைகளைவிட கவிதை வடிவமானது அனைவரும் விரைவில் வாசிக்கும் போக்கிலும் ஆழமாகவும் அதற்கான சிந்தனா கருப்பொருளுடன் விளங்குகிறது. தமிழின் புதுக்கவிதை வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டவராக பாரதியாரை சொல்லலாம்.
ஆனால் சிலரது கருத்து ந.பிச்சமூர்த்தியில் இருந்து புதுக்கவிதை மரபு தொடங்கியது என்பர். மணிக்கொடி, எழுத்து, ழ, மீட்சி என்று ஒரு தீவிர இலக்கிய பத்திரிகை இயக்கமே தமிழில் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் காத்திரமான கவிதைப் படைப்புகள் வெளியாகி வாசகர் பரப்பை சென்றடைந்தது. அம்மரபின் தொடர்ச்சியை இன்றளவும் தற்கால கவிதைகளில் ஆங்காங்கே காணமுடிகிறது.
சமூக வலைதளத்தின் மோகங்களினால் நாம் நமது கற்பனைத் திறனை இழக்கும் அபாயம் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. தாய்மொழியில் பிழையின்றி எழுதுவதில் கூட இந்தத் தலைமுறை தடுமாறி வருகிறது. வாசித்தல், எழுதுதல் போன்றவை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான அம்சம். தமிழின் தொன்மத்தினையும் மரபினையும் காப்பது ஒவ்வொருத் தமிழ்மகனின் கடமையாகும்.