புவியில் பெரும்பகுதி என்றபோதும், நம் புவியியல் பாடத்தில் சிறுபகுதியாகவே இருப்பவை பெருங்கடல்கள். பெருங்கடல்களின் பயன்களுக்கு நன்றி சொல்வதுடன் அவற்றை பாதுகாப்பது குறித்தும் சிந்திக்கும் பெருங்கடல்கள் தினம் இன்று.
புவியின் மேற்பரப்பிலுள்ள கடல்கள் தனித்தனியான பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையே. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல், இந்து மகா கடல், அண்டார்டிக் கடல், ஆர்டிக் கடல் என ஐந்து பெருங்கடல்கள் உலகில் உள்ளன.
ஆனால், “உலகப் பெருங்கடல்” என்ற பெயர்தான் புவியில் இருக்கும் 71% கடற்பரப்புக்கு ஒரே பெயர்.
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் புவி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் உலகக் கடல் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.
இதனை ஏற்று
2009-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதியிலிருந்து உலகக் கடல் நாளைக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக கடல் தினம் கடைபிடிக்கப்
படுகிறது. ஆண்டுதோறும் ஒரு மையக்கருத்தை மூலமாக வைத்து கடல் தினம் கொண்டாடுவது போலவே, ‘பிளாஸ்டிக் மாசுவை தடுத்தல் மற்றும் கடல் துாய்மைக்கான தீர்வுகளை உருவாக்குதல்’ என்பது இந்தாண்டுக்கான மைய நோக்கம்.
உலகமறிந்த ஆக்ஸிஜன் தட்டுப்பாடுக்கு ஒரே தீர்வாக மரம் நடுவதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனிதகுலத்துக்கான 80 விழுக்காடு பிராண வாயுவை கடல்தான் தருகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு, பெருங்கப்பல்களில் மீன்பிடிப்பு அனுமதிகப்பட்டு கடல்வளம் நாசமாக்கப்பட்டது. கடலோரப் பழங்குடிகள் விரட்டப்பட்டனர். கடல், வாழ்க்கை என்பதிலிருந்து வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட்டது. கூடாத குறைக்கு உலகநாடுகள் தங்கள் அபாயகரமான கழிவுகளைப் புதைக்கும் சர்வதேச குப்பைத்தொட்டியாகவும் மாற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான், கடல்பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்த கடல்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதே சமயம், சர்வதேசக் கடலில் சில ஆல்ஃபா நாடுகளின் ஆதிக்கத்தால் நடக்கும் ஆட்டூழியங்களைத் தட்டிக்கேட்பதும் கடல் பாதுகாப்பின் ஒரு அம்சமே என்றும் சர்வதேச கடற்படுகை முகமை இதைத் தடுக்க வேண்டும் என்றும் கடல்சார் சூழலியலாளர்கள் நெடுங்காலமாக தெரிவித்து வருவதும் இந்த நாளில் கவனிக்கத்தக்கது.