நாளைய சமுதாயத்தினருக்கு நமது வரலாற்றை சொல்லும் காலப்பெட்டகமாக திகழ்வது அருங்காட்சியகங்கள். சர்வதேச அருங்காட்சியகங்கள் தினமான இன்று அதன் சிறப்புகளை பற்றி விவரிக்கின்றது இந்த தொகுப்பு.
ஒரு நாட்டின் மரபுரிமையை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அருங்காட்சியகங்கள். முன்னோர்களின் வீரம், வரலாறு, சிறப்புகள் மற்றும் பாரம்பரியங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் அருங்காட்சியகங்களின் பங்கு முக்கியமானது. வாழும் வரலாறாக உள்ள அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,1977-ம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் உலகம் முழுதும் மே 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1977ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம், லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம். அதுபோல இந்தியாவில் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இரண்டாவது மிகப்பழமையான அருங்காட்சியகமாக விளங்குகிறது.
திரைப்படங்களுக்கும், பொழுது போக்கு பூங்காக்களுக்கும் செல்வதில் காட்டும் ஆர்வத்தை அருங்காட்சியகங்களைச் சென்று பார்ப்பதிலும் செலுத்த வேண்டும். நமது முன்னோர்களின் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்வதோடு, வரும் தலைமுறைக்கு கடத்துவதிலும் அருங்காட்சியகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
சர்வதேச அருங்காட்சியக தினத்தன்று கல்வித்துறை மூலமாக மாணாக்கர்களை அருங்காட்சிய சுற்றுலா அழைத்துச் செல்வது அருங்காட்சியகங்களின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும்.
– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.