அன்பு, அரவணைப்பு, அக்கறை, பாசம், தியாகம் என பேரன்பின் பிறப்பிடமாக உள்ள அன்னையை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், அன்னையர் தினமான இன்று அந்த நாள் உருவான வரலாறை பற்றி பார்க்கலாம்.
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வர முடியாது என்ற காரணத்தினால் தான் இறைவன் தனது பிம்பமாய் தாயை படைத்தான் என்று கூறுவதை கேட்டிருப்போம். தான் அடையாத பெயரையும் ,
புகழையும் தன் குழந்தை அடைய வேண்டும் என நினைக்கும் ஒரே பரிசுத்தமான உள்ளம் இவ்வுலகில் தாய் மட்டுமே. மண்ணில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தந்தை எடுத்துக்காட்டாக
இருக்கிறார் என்றால் தாய் எல்லாமுமாக இருக்கிறாள். பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி தன் பிள்ளைகளை வளர்க்கும் தாய்மார்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்
அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்னையர் தினம் முதன் முதலாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உருவானது.
அன்னா ஜாவிரிஸ் என்ற பெண்ணின் தாய் 1905 ஆம் ஆண்டு இறந்து விட்டார். தனது தாயின் நினைவாக 1908 ஆம் ஆண்டு மே மாதம் தாய்மார்களை அழைத்து அன்னா ஜாவிரிஸ் அன்னையர் தினத்தை கொண்டாடினார்.
பின்னர் தன் தாயின் நிணைவை போற்றவும், அனைத்து தாய்மார்களையும் கொண்டாடவும் ”அன்னையர் தினம்” ஒரு நாளை கொண்டாட அரசு அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க அரசுக்கு குரல் கொடுத்து வந்தார். அவரின் தொடர் போராட்டம் காரணமாக அமெரிக்காவின் 28 ஆவது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன் அன்னையர் தினத்தை அங்கீகரித்தார். 1940 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அன்னையர் தினத்திற்காக பிரகடனத்திலும் கையெழுத்திட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாட அன்னா ஜாவிரிஸ் வழிவகுத்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் கொண்டாடுவது போல் இந்தியாவிலும் மே 2 வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மே 14 ஆம் தேதி அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்க்கையின் இன்றியமையாத மனிதராய் இருக்கும் தாய்மார்களை கொண்டாடுவதற்கும், அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் ஒருநாள் போதாது. குடும்பத்திற்காக பம்பரமாய் உழைக்கும் அந்த உள்ளத்தை நித்தமும் போற்றி மகிழ்விப்பதே அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும்..
– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.
Discussion about this post