மின்சார கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரும் ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார கார்கள் சந்தைக்கு அதிகளவில் வர இருப்பதாகவும் அந்நிறுவனங்களின் உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வளர்ச்சியும் அதில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஹூண்டாய், மகேந்திரா, ஃபோர்டு, சீயட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வரும் ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகவும் இந்தாண்டின் மத்தியில் நாட்டிலேயே முதல் எஸ்.யூ.வி ரக மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஹூண்டாய் துணைத் தலைவர் டத்தா தெரிவித்தார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல், டீசல் போன்றவற்றில் இயங்கும் கார்களை விட மின்சார கார்களின் விலை கூடுதலாக இருந்தாலும் சுற்றுப்புறங்களுக்கு மாசு ஏற்படுத்தாமலும் பராமரிப்பு செலவிலும் குறைவாகவே இருப்பதாக மின்சார கார்களின் சார்ஜ் மையங்கள் அமைக்கும்
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்சார வாகன தயாரிப்பிற்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்று மகேந்திரா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பார்த்தசாரதி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சமீபகாலங்களில் மக்களிடம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகனங்களின் உற்பத்தி வரும் காலங்களில் அதிகரித்து, அதன்மூலம் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் காலங்களில் இந்த வாகனங்களுக்கே அதிக சந்தை காணப்படும் என்பதே நிதர்சனமாக உள்ளது.
Discussion about this post