இன்று உலக ஹோமியோபதி தினம்..!

மருத்துவ முறைகளில் ஒன்றான ஹோமியோபதியின் பங்களிப்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. அது பற்றிய சிறப்புக் கட்டுரையைத் தற்போது பார்க்கலாம்..

மருத்துவத்தில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அல்லோபதி, அக்கு பஞ்சர் போன்ற பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளது. ஹோமியோபதி மருத்துவம் என்பது நம்முடைய மனதையும், உடலையும் ஆராய்ந்து செய்யக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும். ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உடல் மற்றும் மனதுக்கு ஏற்றவகையில் தனித்துவமான மருத்துவத்தை அளிப்பதே இந்த ஹோமியோபதியின் தனி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனித்தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறையாகும். இந்த மருத்துவ முறையில் எந்தவித பக்கவிளைவுகளும் கிடையாது என்றே சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சைனஸ், தைராய்டு, மூட்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் சரும நோய்களுக்கு, இது மிக சிறந்த வைத்திய முறையாக அமைந்திருக்கிறது என்றும் பலரால் பரிந்துரைக்கப்படுகிறது.

ஹோமியோபதி சிகிச்சை முறையால் அறுவை சிகிச்சை இன்றி, நோயானது குணப்படுத்துகிறது. அதற்கு, ஆரம்ப நிலையிலேயே இம்மருத்துவ முறையை நாட வேண்டும். ஹோமியோபதி சிகிச்சை மூலம் பல நோய்களையும் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்கிறார்கள் ஹோமியோபதி மருத்துவ நிபுணர்கள்.

ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜெர்மனி மருத்துவர் சாமுவேல் ஹானிமோன். இவர் பிறந்த தினமான ஏப்ரல் 10ம் தேதியே உலக ஹோமியோபதி மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

எது ஒன்றை உருவாக்கும் தன்மை உடையதோ அது தான் அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதனைக் கொண்டு ‘லைகாஸ்கேர்லைகாஸ்’ என்ற தத்துவத்தினை உருவாக்கினார் சாமுவேல் ஹானிமோன். எளிமையாகச்சொன்னால் ‘முள்ளை முள்ளால் எடுக்க முடியும்’ என்பது தான் அது.

ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதும், பொதுமக்கள் இதனை ஏற்கச் செய்வதும் இந்த தினத்தின் நோக்கங்களாக கடைபிடிக்கப்படுகிறது.

– ராஜா சத்யநாராயணன்

Exit mobile version