சர்வதேச சுகாதர தினம் 2021

உலகம் மொத்தமும் முறையான சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட காலமாக இந்த கொரோனா காலத்தைச் சொல்லலாம். காரணம், இந்த ஒரே ஒரு பெருந்தொற்று உலகம் முழுமையும் திக்குமுக்காடக் காரணமாயிருந்தது. என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருந்தது.

ஊருக்கு பிரச்சினை என்றால் உள்ளூர் அமைப்புகள் பார்த்துக் கொள்ளும். உலகத்துக்கே பிரச்சினை என்றால்? சர்வதேச நாட்டாமை ஐ.நா.சபையின் கிளையான சர்வதேச சுகாதார அமைப்பின் தலையில் இந்த பொறுப்பு விழுந்தது.

கொரோனா விவகாரத்தைப் பொறுத்தவரை, மனிதர்களின் இடப்பெயர்வைத் தடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான தேவையாக இருந்தது. விளைவு உலக நாடுகள் பலவற்றின் எல்லைகள் மூடப்பட்டன. வான்வழி, கடல்வழி, தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. WHO இந்த தொற்றை சர்வதேச மருத்துவப் பேரிடராக அறிவித்தது.

பின்னர் எல்லா நாடுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இன்னொருபக்கம் மருந்துக்கான ஆய்வுகள் துரிதப்படுத்தப்பட்டன. அவசரகதியில் முறையான சோதனைகள் படிப்படையாக நடக்காதபோதும் மருந்துகளை மனிதர்கள் முயற்சி செய்தன சில நாடுகள். சானிட்டைசரைக் குடிக்க சொல்லி சில தலைவர்களும், குடித்துவிட்டு இறந்த தொண்டர்களும் என கவனிக்க வேண்டியவற்றின் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது ஐ.நாவுக்கு.

ஆனால், மருந்தோ/முடிவோ கிடைத்தபாடில்லை. இருந்தபோதும் உலக நாடுகளுக்கு ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தல்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தது இந்த அமைப்பு. இதற்கிடையில் மது குடித்தால் கொரோனா வராது என்று சர்வதேச அளவில் குடிமகன்கள் கொளுத்திப்போட, அதையும் கூறுபோட்டு பொய் என்று நிரூபித்தது உலக சுகாதார நிறுவனம். சொல்லப்போனால், இந்தக் கொரோனா காலத்தில், தனக்குள்ளாகவே ஏராளமான பிரிவுகளை உருவாக்கி பொறுப்பெடுத்துக்கொண்டு குட்டி ஐநாவாகவே செயல்பட்டது உலக சுகாதார நிறுவனம்.

சிறு சிறு விழிப்புணர்வு வேலைகள் தொடங்கி கடந்த மார்ச் 31ஆம் தேதி (2021) உலகத் தலைவர்கள் அனைவரையும் கூட்டி சர்வதேச பேரிடர்க்கால ஒப்பந்தம் போட்டது வரையில் உலக சுகாதாரம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது உலக சுகாதார அமைப்பு. இந்த அமைப்பின் பிறந்தநாள் இன்று.

1948ஆம் ஆண்டு அமெரிக்கா தனது அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டது. இந்த அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் நாட்டு மக்களுக்கான ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஒரு பொதுவான அமைப்பும் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட நாளான ஏப்ரல் 7ஆம் நாள் ஆண்டுதோறும் சர்வதேச சுகாதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் 7000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கி வருமுலக சுகாதர அமைப்பின் செயல்பாடுகளுக்கு, கொரோனா என்பது ஒரு அண்மைக்கால உதாரணம் மட்டுமே. இதேபோன்று உலகின் எந்த மூலையில் எப்படியான தொற்றோ/ஆர்ரோக்கியக் குறைபாடோ ஏற்படும்பட்சத்தில் WHOவின் உதவியுடன் இயங்கும் அமைப்புகள் களத்தில் நிற்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. 

Exit mobile version