இறந்த பிறகு கண் தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10ஆம் தேதி உலக கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நாம் இறந்த பின்னும் கண்தானம் செய்வதனால் மற்றொருவர் மூலம் நம் கண்களால் இந்த உலகை பார்க்க முடியும். இறந்த பிறகு மண்ணோடு மண்ணாக மக்கி போகும் நம் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், நாம் இறந்தும் பலருக்கு வாழ்வளிக்க முடிகிறது.
2,050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் கண் பார்வையற்றோர் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சர்வதேச அளவில் 3 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண் பார்வையற்றோர் உள்ளனர் என தெரியவந்தது. நம் இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். நாம் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால், இந்தியாவில் பார்வையற்றவர்களை பார்வை உடையவர்களாக மாற்ற முடியும்.
நவீன காலத்தில் கணினி மற்றும் கைபேசியோடுதான் வாழ்க்கையை நடத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி சிறு வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்பட காரணமாக அமைகிறது.
எனவே, கணினி மற்றும் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவோர், அடிக்கடி கண்களை மூடியும், சிமிட்டவும் செய்ய வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் விதவிதமாய்க் கண்டுபிடிப்புகள் பெருகியும்கூட கண்டுபிடிக்கப்படாத செயற்கை வரிசையில் முக்கிய இடம் வகிப்பது ரத்தமும், கண்களும்.
இறந்த பின்னர் மண்ணோடு மண்ணாக செல்லும் கண்களை தானம் செய்தால் அவை பிறரின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் என்பதே மருத்துவர்கள், தன்னார்வலர்களின் விழிப்புணர்வு வாசகமாகும்.
அனைவரும் கண்தானம் செய்வோம்! பிறர் கண் மூலமாக மீண்டும் உயிர்வாழ்வோம்!!
– ராஜா சத்யநாராயணன்.