1983 கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று உலகக்கோப்பையினை வென்ற பிறகு அடுத்த கோப்பைக்காக காத்திருக்க 28 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனை தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆ ஆண்டில் நிகழ்த்திக் காட்டியது. சரியாக ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்றுதான் அந்த சாதனையை இந்தியா நிகழ்த்தியது. குலசேகரா வீசிய பந்தினை சிக்சருக்கு பறக்கவிட்டு இரசிகர்களின் இதயத்தில் தனக்கான இடத்தினைப் பதித்தார் தோனி.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஒரு பார்வை:
லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வி, இங்கிலாந்து உடன் டிரா என்று சில சிறிய சறுக்கல் இருந்தாலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது தோனி தலைமையிலான அன்றைய இந்திய அணி. பிறகு ஆஸ்திரேலியாவை காலிறுதியில் விரட்டி அடித்தது. அப்போதே இந்திய அணியின் உலகக்கோப்பை கனவானது நிறைவேறியதுபோலத்தான். அதற்கு காரணம் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியனாக இருந்து இந்த தொடரின் நடப்பு சாம்பியனாக ஹாட்ரிக் கோப்பைக் கனவோடு காலிறுதிக்கு வந்தது. ஆனால் நடந்தது வேறு. இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீட்டிற்கு அனுப்பியது. பிறகு அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட்டானது இரு நாட்டு இரசிகர்களுக்கு இடையேயான ஒரு தார்மீகப் போராகவே பாவிக்கப்படுகிறது. போட்டிக்கு முன் தினம் ஷாகித் அப்ரிடி சச்சின் டெண்டுல்கரை நூறாவது சதத்தினை எங்களுக்கு எதிராக அடிக்க விடமாட்டோம் என்று கூறியிருந்தது இன்னும் அதிகமான சலசலப்பையும் எதிர்ப்பார்ப்பையும் கிளப்பியது. ஆனால் சச்சினால் அந்தப் போட்டியில் 85 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இருப்பினும் இந்திய அணி பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்தது.
இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடனான மோத வேண்டிய சூழல். முதலில் பேட்டிங் செய்தது இலங்கை. சாகிர் கான் பந்து வீச்சில் முதலிலேயே உப்பில் தரங்கா வை இரண்டு ரன்களுக்கு வெளியேற்றினார். 33 ரன்கள் இருக்கையில் தில்சனை ஹர்பஜன் சிங் வெளியேற்றினார். பிறகுதான் இந்திய அணிக்கு ஒரு சோதனைக் காத்திருந்தது. அது இலங்கையின் மாஸ்டர் பேட்ஸ்மேன்களான குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்த்தனே ஆகிய இருவரும்தான். யுவராஜ் சிங் பந்து வீச்சில் குமார் சங்ககாரா 48 ரன்களுக்கு தோனியிடம் ஸ்டம்பிட் ஆனார். ஆனால் ஜெயவர்தனேயின் ஆட்டத்தினைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. அவர் இறுதிவரை தன்னுடைய விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் 103 ரன்கள் எடுத்தார். திலன் சமரவீரா 21 ரன் இருக்கையில் யுவராஜ் சிங் பந்தில் எல்.பி,டபிள்யூ ஆகி வெளியேறினார். கபுகேட்ரா 1 ரன்னில் சாகிர் கான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். குலசேகரா 32 ரன்னில் தோனியிடம் ரன் அவுர் ஆனார். திசாரா பேராரா 22 ரன்னில் களத்தில் இருக்க 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 274 ரன்கள் அடித்து ஒரு வலுவான ஸ்கோரை எட்டியது.
இந்தியா
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும், கவுதம் கம்பீரும் தொடக்க ஜோடியாக களமிறங்கினார்கள். மலிங்காவின் பந்துவீச்சில் சேவாக் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். அடுத்து எல்லோரும் எதிர்பார்த்த சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கவுதம் கம்பீர் ஒரு தூணாக இந்திய அணிக்கு செயல்பட்டார். அவரும் விராட் கோலியும் ஓரளவு பார்டனர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். விராட் கோலி தில்சன் பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் சிங் தான் களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரலாற்றை எழுத தோனி களம் புகுந்தார். அதற்கு யுவராஜ் சிங்கின் உடல்நிலையும் ஒரு காரணமாக இருந்தது. புற்றுநோய்க்கான அறிகுறி அதிகமான இருந்த காலகட்டம் அது. ஆகவே தோனி களம் புகுந்தார். தோனியும் கவுதம் கம்பீரும் ஜோடி சேர்ந்து நல்ல நிலைக்கு அணியை எடுத்துச் சென்றனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கவுதம் கம்பீர் 97 ரன்கள் இருக்கும்போது ஆட்டமிழந்து வெளியேறினார்.
சரித்திரம் படைத்த இந்தியா :
கவுதம் கம்பீர் ஆட்டமிழந்த பின்னர் யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்தார் தோனி. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர். அதிலும் தோனியின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 79 பந்துகள் மட்டுமே சந்தித்து 91 ரன்கள் எடுத்தார். 11 பந்துகள் மீதம் இருக்கையில் குலசேகராவின் பந்துவீச்சில் ஒரு சிக்சரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். இன்று வரை அவர் அடித்த சிக்சர் இரசிகர்களின் இதயத்தில் நீங்காமல் இருக்கிறது. ஒரு தலைவனாக இந்திய அணியைக் கொண்டு சென்று வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்தார் தோனி. இந்தியாவின் 28 ஆண்டு கனவானது தோனியாலும் கம்பீராலும் பிற போட்டிகளில் நன்றாக விளையாடிய மற்ற வீரர்களினாலும் முக்கியமாக கூட்டு முயற்சியானாலும் நிறைவாகியது.