ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி உலகெங்கிலும் உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்
குழந்தைத் தொழிலாளர்களுக்கு சிறப்பான, இலவசக் கல்வியை அளிப்பது மற்றும் அவர்களை குழந்தை தொழிலாளர்களாக யாரும் பயன்படுத்தாமல் பாதுகாப்பதும் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தின் இலக்காக உள்ளது.
ஆய்வுகளின்படி, தற்போது 5 லிருந்து 15 வயதுக்கு உட்பட்ட 15.2 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளதாக சில கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் உடல்நலம் நலிந்து ஆபத்தான நிலையில் உள்ளது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
நாம் சாலையில் பயணிக்கும் போது, சிக்னலில் வண்டியை நிறுத்தும் போது சின்ன சின்ன குழந்தைகள், ஏதேதோ பொருட்களை விற்றபடி சாலையை கடந்து, நம் வாகனங்களின் அருகில் ஓடி வருவதைப் நம்மால் இன்றும் பார்க்க முடிகிறது. மேலும், சிறுவர்களை கட்டடங்கள் கட்டும் இடங்களிலும், ஹோட்டல்களில் மேஜை துடைப்பதையும் நாம் கவனிக்கிறோம். அத்தகைய குழந்தைகளின் உரிமையை காப்பாற்றும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
சில பெற்றோரும் குழந்தைகள் பணிபுரிந்தால் தமக்கு பொருளாதார உதவியாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாற்காலிக நலனுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ் செய்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்தியாவில் அரசியலமைப்பின் தொழிற்சாலை சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம், சிறார் நீதிச் சட்டம் போன்ற குழந்தை தொழிலாளர்களை மீட்க பல சட்டங்கள் உள்ளன. 2025ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்களே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பல நாடுகள் முயற்சித்தும் வருகின்றன.
– ராஜா சத்யநாராயணன்