கிராமப் பகுதிகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 112 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 525 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், கிராமபுறங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது, 2 கட்டங்களாக 6 வருடங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2019-20 நிதியாண்டில் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 5 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.