கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் பெண்கள்

தமிழக அரசின் உதவிகள் மூலம், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதனைப் பெண்கள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில், இந்த கைவினைக் கலைஞர்களின் கலைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு 120 பெண்கள் உள்பட 150 பேர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். இங்கு, களிமண்னை உருண்டை பிடிப்பது முதல், அதை பல்வேறு வடிவங்களாக ஆக்குவது, வண்ணம் தீட்டுவது என, பல கட்ட வேலைபாடுகள் நடைபெறுகிறது. குறிப்பாக, வீடுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீர் குடுவை, காபி குடுவை, பல வகையான பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள், பூஜை பொருட்கள், மேசை அலங்கார பொருட்கள், அலுவலகத்திற்கு தேவையாக பொருட்கள் என எண்ணற்ற பொருட்களின் உற்பத்தியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1994 ஆம் ஆண்டிலிருந்து, பெரும்பான்மையான பெண்களை கொண்டு, இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் சகிலா ஃபாரூக். பல்வேறு இன்னல்களை கடந்து, இந்த நிறுவனத்தின் மூலம், மண்பாண்டக் கலை தற்போது வளர்க்கப்பட்டு வருவதாகவும், இங்கு 120 க்கும் மேற்ப்பட்ட ஏழைப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை கொண்டே கைவினைப் பொருட்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இவர் கூறுகிறார்.

தங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வர்ணங்கள் தீட்டப்படும் பல பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும், பல வீடுகள், அலுவலகங்களை அலங்கரிப்பதும், தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக, இங்கு வேலை செய்யும் பெண்கள் கூறுகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், மலேசியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், நமது கலாச்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவை காக்கப்பட, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல்வேறு நாடுகளில், குயவர் தொழில் மற்றும் மண்பாண்டம் குறித்து கற்பிக்கப்படுவது போல், தமிழக அரசும் குயவர் தொழில் குறித்தும், மண்பாண்டத்தின் அவசியம் பற்றியும், மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், பாட புத்தகங்கள் மூலம் கற்பிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தொழிலுக்கு பல்வேறு உதவிகள் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துகொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் சகிலா ஃபாரூக், அரசு கூடுதல் உதவியளித்தால் இத்தொழில் குறித்து, மேலும் பலருக்கு பயிற்சி கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

குயவர் தொழிலும், மண்பாண்டமும் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில், மண்பாண்டத்தின் அவசியத்தினை உணர்ந்து, அதை உபயோகிக்க முன்வருவதே, அத்தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமையும்.

Exit mobile version