மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியான அணி, 4-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
6-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. நார்த் சவுண்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதின. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 19 புள்ளி 4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேனியல் வயிட் 43 ரன்களும், ஹீதர் நைட் 25 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 106 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 15 புள்ளி 1 ஓவரில் இலக்கைக் கடந்து வெற்றிபெற்றது.
இதனால் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
அந்த அணியில் அதிகபட்சமாக அஸ்லீக் கார்டனர் 33 ரன்களும், மெக் லானிங் 28 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய அஸ்லீக் கார்டனர், 4 ஓவர்களில் 3 விக்கெட்களை கைப்பற்றி, ஆட்ட நாயகி விருதைப் பெற்றார். தொடர் நாயகி விருதை அலிசா ஹீலேவுக்கு வழங்கப்பட்டது.
Discussion about this post