உலக மகளிர் தினமான இன்று, தங்கள் சாதனைகளால், உலகையே திரும்பிப்பார்க்க வைத்த சில சிங்கப்பெண்கள் பற்றிய தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
1.ஜெயலலிதா
பெரும்பான்மையாக ஆண்களே கோலோச்சுகிற தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிக்கொடி நாட்டியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. அவரின் புகழ்மிக்க நடிப்பால் மக்கள் மனதில் கலந்து அரசியலில் ராணியாக திகழ்ந்தவர். ஒற்றை பெண்மணியாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்தவர் ஜெயலலிதா. திரை உலக நடிப்பில் புகழின் உச்சியில் இருந்தவர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்று தமிழக முதலமைச்சர் ஆனவர். பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த பெருமைக்கு சொந்தக்காரர். தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐ. நா சபையில் கைத்தட்டை பெற்ற, இந்தியாவை சேர்ந்த முதல் பெண் முதலமைச்சராவார். இவரே தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர் கட்சி தலைவரும் ஆவார்.
2. இந்திராகாந்தி
முன்னாள் பிரதமரான நேருவின் மகளான இந்திராகாந்தி தனது தாத்தா, தந்தை வழியில் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தன் தந்தையிடம் அரசியலை கற்றுக்கொண்ட இவர் தந்தை மறைவுக்கு பிறகு இந்திய திருநாட்டின் பிரமரானார். இந்தியா வரலாற்றில் முதல் பெண் பிரதமர் இவர் தான். இதனைத் தொடர்ந்து மூன்று முறை இந்திய பிரதமராக இருந்தவர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, மன்னர்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறையை ஒழித்தது, நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றியது, பசுமை புரட்சி மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய செய்தது, சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தது என இந்திராவின் சாதனை நீண்டு கொண்டே செல்லும். இந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா ஏற்படுத்திய தாக்கமும், சுவடுகளும் காலத்தால் அழியாத வரலாறு.
3.மாயாவதி
நாட்டின் முதல் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மாயாவதி. தலித் மக்களுக்கான அடையாளமாக கருதப்படும் இவர் உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான தலித் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் இவரே. இவர் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து தனது 39 வது வயதில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக ஆன போது, நாடே ஆச்சரியத்துடன் பார்த்தது. அப்போதைய நிலையில் உத்திரப் பிரதேச வரலாற்றில் இடம்பிடித்த இளம் முதலமைச்சர் இவரே.
4.மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உள்ள மம்தா பானர்ஜி, வெள்ளை காட்டன் புடவை, வெள்ளை நிற ரப்பர் செருப்பு என தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு அரசியலில் தன்னை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வறுமையின் பிடியில் வாழ்ந்த மம்தா தனது 15 ஆவது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்து தனது போர்க்குணத்தால் 30 ஆண்டுகால இடதுசாரி கோட்டையை தகர்த்தார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸிற்கு இணையாக கட்சியை வளர்த்தெடுத்தார். பின் நாட்களில் ஆட்சியை பிடித்த மம்தா தொடர்ந்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பேற்றார். இந்தியாவில் தற்போதுள்ள ஒரே பெண் முதலமைச்சரும் மம்தா தான்.
5.கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் தமிழகத்தை தாய் வழி பூர்வீகமாக கொண்டவர். ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்றார். அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை. கமலா ஹாரிஸ் இதனை முறியடித்தார். இதன் மூலம் கமலா ஹாரிஸ் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க துணை அதிபர், முதலாவது ஆசிய அமெரிக்க துணை அதிபர், முதலாவது இந்திய அமெரிக்க துணை அதிபர் என பல புகழ்களைப் பெறுகிறார்.
6.ஜார்ஜியா மெலோனி
இத்தாலி வரலாற்றில் பிரதமராக பதவியேற்ற முதல் பெண், ஜியோர்ஜியா மெலோனி . தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார் மெலோனி. கடும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி சிக்கியதை அடுத்து பல அரசியல் மாற்றங்கள் நடந்ததையடுத்து பிரதமராக தெர்வு செய்யப்பட்டார் மெலோனி.