இந்தியாவில் ஆடவர்களுக்கு ஐபிஎல் போட்டி உள்ளது போல பெண்களுக்கு டபிள்யூ.பி.எல் தொடங்க இருக்கிறது. இதற்காக நேற்று ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்மிருதி மந்தனாவை 3.4 கோடி ரூபாய்க்கு விலைக்கு ஆர்.சி.பி அணி வாங்கியுள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 1.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் ஆர்.சி.பி அணிக்கு சென்றுள்ளார். இதைத் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி 1.7 கோடி ரூபாய்க்கு ஆர்.சி.பி அணியினர் வாங்கியுள்ளனர். எல்லிஸ் பெர்ரி ஆஸ்திரேலியாவிற்காக ஐசிசி உலககோப்பையும் விளையாடி உள்ளார், ஃபிபா கால்பந்து உலக கோப்பையும் விளையாடி உள்ளார். இரு ஆட்டங்களிலும் இவர் கை தேர்ந்தவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் தன்னுடைய சிறிய வயதிலேயே, அதாவது 2007ல் 16 வயது 8 மாதங்கள் காலத்திலேயே விளையாட தொடங்கிவிட்டார். இவர்தான் ஆஸ்திரேலியாவிற்காக களமிறங்கிய மிகவும் குறைந்த வயது உடைய வீராங்கனை.
மேலும் இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் 40 லட்சம் ரூபாய்க்கு ஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான டேன் வேன் நெய்க்ரெக் 30 லட்சம் ரூபாய்க்கு ஆர்.சி.பி அணியில் இடம் பிடிக்கிறார். ஆடவர் ஆர்.சி.பி அணியில் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்தாலும் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டிகளில் கூட அவர்கள் கோப்பையை வெல்லவில்லை. மகளிர் அணியினராவது வெல்வார்களா? என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இ சால் கப் நம்தே என்று களத்தில் இறங்க உள்ளது இந்த மகளிர் ஆர்.சி.பி அணி.