சுதந்திர இந்தியாவில் இன்னும் அடிப்படை வசதிகள் வந்து சேராத கிராமங்கள் மலைப்பிரதேசங்களும் இல்லாமல் இல்லை. ஆனால், மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் மனிதநேயமும் இருக்கும் என்பதற்கேற்ப இயங்கி வருகிறது ஆட்டோகிரிஷ் என்னும் ஆம்புலன்ஸ் சேவை.
சாலை வசதிகளின்றி, மலை பிரதேசங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்காக ’ஆம்புரிக்ஷ்’ என்ற பெயரில், அடிப்படை வசதிகளுடன் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகிறது.
ஜபல்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆட்டோ ஆம்புலன்சில், நோயாளி படுக்கும் ஸ்ட்ரெச்சர், உதவியாளர் அமர இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவிப் பெட்டி, மின் விளக்கு மற்றும் மின் விசிறி ஆகியவை கொண்டு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று உயிர்காக்கும் மகத்துவமான பணியை செய்கிறது.
இப்போது குன்னூரில் மூன்று ஆட்டோ ஆம்புலன்ஸ்கள், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கேட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.
இதை தனிநபராகத் தலைமையேற்று நடத்திவருகிறார் ராதிகா. வெறும் 6 ஆட்டோக்களை கொண்டு இந்த ஆம்புரிக்ஷ் சேவையை தொடங்கி இருக்கும் ராதிகா, “இந்த சேவையை நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராம பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆட்டோக்களால் மலையேறிப் பயணிப்பது மருந்தும் மருத்துவமும் மட்டுமல்ல. மனிதநேயமும்தான்.