தேனி மாவட்டம் போடியில் உள்ள மின் மயானத்தில் முருகேஸ்வரி என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். ஆண்கள் மட்டுமே செய்து வந்த இந்த பணியை, ஒரு பெண் செய்வது வியப்பான ஒன்று.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த கருப்பையா எனும் சலவைத்தொழிலாளியின் மனைவி முருகேஸ்வரி. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர், சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தனது தாய் மற்றும் மனவளர்ச்சி குன்றிய சகோதரியுடன் வசித்து வந்த இவர், போடியில் சலவைத்தொழில் செய்து வந்த கருப்பையாவை திருமணம் செய்துகொண்டார்.
கணவருக்கு உதவியாக மின் மயானம் அமைந்துள்ள ஆற்றங்கரைப் பகுதியில் சலவைத்தொழில் செய்து வந்த நிலையில், போதிய வருவாய் இல்லாததால் பகுதிநேர வேலையாக தனது கணவரை மின் மயானத்திற்கு வெட்டியான் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சுடுகாட்டில் பணிபுரிந்ததால், உறவினர்கள் ஒதுக்கவே, வேறு வழி இன்றி தனது கணவர் மற்றும் இரு மகன்களுடன் சுடுகாட்டிலேயே தங்கி, கணவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் முருகேஸ்வரி.
கடந்த 2012 ஆம் ஆண்டு, இந்த சுடுகாடு மின் மயானமாக மாற்றம் பெற்றது. இந்த சூழலில், தனது கணவருக்கு கண்பார்வை கோளாறு ஏற்படவே, இவர்கள் தங்குவதற்கு, மயானப்பகுதியில் பயன்பாடின்றி கிடந்த, நாய்கள் கருத்தடை செய்ய பயன்படுத்தப்பட்ட அறை கொடுக்கப்பட்டது.
எல்லாபுறமும் சூழ்நிலைகள் முருகேஸ்வரிக்கு நெருக்கடி கொடுக்க, 2 குழந்தைகளுடன் தனது கணவரையும் சேர்த்து பராமரிக்க வேண்டிய சூழலில், மனம் தளராமல், தன் கணவர் செய்து வந்த பிணங்களை எரியூட்டும் பணியை தானே செய்ய முன்வந்தார். ஆம்… இன்று வரை சுமார் 2000க்கும் மேற்பட்ட சடலங்டகளை எரியூட்டியுள்ள முருகேஸ்வரி, தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறார்.
தேனி திண்ணை மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், 2018ஆம் ஆண்டிற்கான அன்னை தெரசா மனித நேயர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறு துன்பம் வந்தால் கூட மனம் கலங்கும் மகளிருக்கிடையே, எந்த துன்பம் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் புதுமைப் பெண் முருகேஸ்வரி.
Discussion about this post