வாடகை கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு உல்லாசமாக காரில் சுற்றித்திரிந்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் டிராவல்ஸ் நடத்தி வரும் சுந்தர் சிங் என்பவர், கடந்த மாதம் 5 ஆம் தேதி ஜெயசுதா என்ற பெண்ணுக்கு திருச்சி, நெல்லை, குற்றாலம் செல்ல இனோவா கார் ஒன்றை வாடகைக்காக வழங்கியுள்ளார். காரை சுந்தர் சிங்கின் ஓட்டுநர் நாகநாதன் ஓட்டிச் சென்றார். கார் குரோம்பேட்டை சென்ற போது, ஜெயசுதா தனது நண்பர்கள் என்று கூறி, நான்கு ஆண் நண்பரை ஏற்றியுள்ளார். திருச்சி, நெல்லை, குற்றாலம் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அவர்கள் சுற்றிய பின்னர் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
மதுரை ஒத்தக்கடை சுங்கச்சாவடி அருகே வந்த போது நாகநாதனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த சுந்தர் சிங், அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு அசோக் நகர் காவல்துறையினர் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கொட்டாம்பட்டி காவல்துறையினர், பாண்டிச்சேரி தனியார் விடுதியில் இருந்த ஜெயசுதா உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாகநாதன் கொலை செய்யப்பட்டதும், காரை விற்க முயன்றதையும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் மதுரை சிறையில் அடைத்தனர்.
Discussion about this post