யாகம் நடத்துவதாகக் கூறி வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் பிடித்த நிலையில், பலியிடுவதற்காக வீட்டில் கட்டி வைத்திருந்த பசுங்கன்று உணவு, நீரின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ். இவர், பில்லிசூனியம், ஏவல், தோஷம் கழிப்பதாகக் கூறி பலரிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளார். அரசியல்வாதி ஒருவர் தோஷம் கழிப்பதற்காக மந்திரவாதி சதீஷை நாடிய போது, பசுங்கன்று ஒன்றை பலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மந்திரவாதியைப் பற்றி உள்ளூரில் சிலரிடம் அரசியல் பிரமுகர் விசாரித்தபோது அவர் இது போன்று பலரிடம் பலியிட ஆடு, கோழி, பசுங்கன்று முதலியவற்றை வாங்கி சந்தையில் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததால் மந்திரவாதியை அரசியல்வாதி திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன மந்திரவாதி தலைமறைவானதையடுத்து, அவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுக்கன்று குடிநீர் உணவின்றி இறந்தது.
அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டினர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன் பசுங்கன்றின் உடலை மீட்டு புதைத்ததோடு அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
Discussion about this post