தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், எஞ்சிய திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்நிலையில், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இன்றைய விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post