கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்த 70 சதவீதம் பேர் சென்னையில் வசிப்பவர்கள் என்பதால் சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனஅதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவுகின்றன. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் கேட்டனர். இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு எதையும் எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், இது சம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Discussion about this post