சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைய முயன்ற 2 இளம் பெண்களும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அழைத்துச்செல்லப்பட்டனர்.இந்தநிலையில் தாங்கள் திரும்பவும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவோம் என்று பெண் பத்திரிகையாளர் கவிதா தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலை பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் ரஹானா ஆகியோர் சபரிமலை சன்னிதானத்திற்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர்.
அப்போது அவர்களை சூழ்ந்துக்கொண்டு தடுத்து நிறுத்திய பக்தர்கள், சன்னிதானத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். கோவில் மேல்சாந்தியினரும் தந்திரிகளும் 18-ம் படியின் முன்பு போராட்டத்தில் குதித்ததுடன், இளம் பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைந்தால் கோவில் நடையை மூட நேரிடும் என பந்தள மன்னர் குடும்பத்தினர் எச்சரித்தனர்.
நிலவரம் விபரீதமாவதை உணர்ந்த கேரள அரசு உடனடியாக பெண்களை திருப்பி அழைத்து வர உத்தரவிட்டது. இதனையடுத்து ஐஜி ஸ்ரீஜித் தலைமையிலான போலீஸாரின் பாதுகாப்புடன் கவிதா மற்றும் ரஹானா ஆகியோர் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தாங்கள் திரும்பவும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவோம் என்று பெண் பத்திரிகையாளர் கவிதா தெரிவித்துள்ளார். இந்த பரபரப்புகளுக்கு இடையே கொச்சியில் உள்ள ரஹானாவின் வீட்டை மர்மநபர்கள் சூறையாடியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.