தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலஜாபாத், ஓரிக்கை, செவிலிமேடு ஆகிய இடங்களில் மழை பெய்தது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. திருநெல்வேலி, கோவை,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், பயிரிடுவதற்கான, தேவையான ஈரப்பதம் கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவு பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் முதல்போக நடவு செய்த நெல் மற்றும் காய்கறிகள், மற்றும் தக்காளி நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு இரண்டாம் கட்ட மழையும் கிடைத்திருப்பதால், இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள பகுதியில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், அப்பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது. கடையநல்லூர், மாவடிகால், சொக்கம்பட்டி இடைக்கால், கண்மணியபுரம், கிருஷ்ணாபுரம், பாலஅருணாச்சலபுரம் போன்ற பகுதிக்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளங்கள், கால்வாய்களில் நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தது. இதனால், மகசூல் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களான வில்லியனூர், அரியூர், மதகடிப்பட்டு, திருக்கானூர், பாகூர், ஏம்பலம், அரியாங்குப்பம், காலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. மேலும், ஒரு சில இடங்களில், மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Discussion about this post